உப்பில்லாப்பண்டம் குப்பையிலே என்பார்கள்.
அந்த முறை மாவீரன் சுசீலன் தான் கப்டன் மயூரனை Pajero வாகனத்தில் அவனது சின்னக்கா பிரபாவிடம் கூட்டிக் கொண்டு வந்தான்.
“பிரபாக்கா, மயூரனுக்கு நல்லாச் சமைச்சுக் குடுங்கோ. நல்ல குளிர்ந்த சாப்பாடுகள் குடுங்கோ“ என்று சொல்லி விட்டுச் சென்றான்.
போன முறை
சுசீலன் தனியாக மயூரனின் கடிததத்துடன் வந்த போது “பிரபாக்கா, மயூரன்
சரியான சென்சிற்றீவ். எப்பவும் உங்களை, அம்மாவை, குடும்பத்தை... எண்டு
நினைச்சுக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார். கண் கலங்குவார். அதுதான்
அண்ணை(தலைவர்) அடிக்கடி அவருக்கு லீவு குடுக்கிறவர். ‘போய் அம்மாவைப்
பார்த்திட்டு வாடா‘ எண்டு சொல்லி அனுப்பிறவர். இப்ப அவர் முக்கியமான
வேலையிலை நிற்கிறார். வரவே ஏலாது. அதுதான் கடிதம் கொணர்ந்தனான்...“ என்று
சொன்னவன்.
இப்போது
மயூரனோடு வந்திருந்தான். மயூரனின் அம்மா, அப்பா... ஒருவரும் அப்போது
ஊரில் இருக்கவில்லை. இந்திய இராணுவத்தின் தொல்லை தாங்க முடியாது
யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள்.
பிரபா
வேலையில் நின்றாள். சுசீலனையும் மயூரனையும் வீட்டுக்குப் போகும்படி
அனுப்பி விட்டு, விடயத்தைச் சொல்லி அவசர லீவு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு
விரைந்து அவசரம் அவசரமாகச் சோறும் கறிகளும் சமைத்துக் கொடுத்த போது “நல்ல
ருசியா இருக்கக்கா“ என்று சொல்லிச் சொல்லி மிகுந்த ஆசையோடு மயூரன் அவைகளைச்
சாப்பிட்டான்.
அவன்
அத்தனை ஆசையாகவும் ரசித்தும் ருசித்தும் சாப்பிடுவதைப் பார்க்க, அவனது
சின்னக்கா பிரபாவுக்கு மனசு நிறைந்து ஆனந்தத்தில் கண்கள் கலங்கின. நிறைந்த
திருப்பியோடுதான், தான் சாப்பிடத் தொடங்கினாள். அப்போது தான் ‘கறிகளில்
வழமையான சுவையில்லை‘ என்பதை உணர்ந்தாள். மரவள்ளிப் பிரட்டலுக்கு உப்பு
துப்பரவாகக் காணாமல் இருந்தது. ‚அவசரத்தில் இப்படிச் சமைத்து விட்டேனே!‘
என்ற வருத்தத்துடன் “என்னடா இந்தச் சாப்பாட்டையே ‘ருசி, ருசி‘ எண்டு
சொல்லிச் சாப்பிட்டனி? வாயிலையே வைக்கேலாமல் கிடக்குது. ஒரு சொல்லுச்
சொல்லியிருந்தியெண்டால் மரவள்ளிக் கறிக்குள்ளை கொஞசம் உப்புத் தண்ணியைத்
தெளிச்சுக் கலந்து விட்டிருப்பனே“ என்றாள்.
அதற்கு மயூரன் “உப்பு இல்லாட்டில் இப்ப என்ன? நாங்கள் உப்பில்லாமலும் சாப்பிடுவம்“ என்றான்.
ஏன் உப்பில்லாமல்..? பிரபா யோசனையோடு கேட்டாள்.
அப்போதுதான் மயூரன் அதைச் சொன்னான்.
“நாங்கள்
நித்தியகுளம் காட்டுக்குள்ளை இருக்கக்கை எங்களுக்கு
ஒவ்வொருநாளும்பருப்புக்கறியும் சோறும் தான் சாப்பாடு. ஒரு கட்டத்திலை
நாங்கள் கொண்டு போன உப்பு முழுசா முடிஞ்சிட்டுது.
அண்ணை(தலைவர்)
உப்பு வாங்க இரண்டு போராளிகளை அனுப்பி வைச்சார். போனவர்கள் திரும்பவில்லை.
இந்தியன் ஆமியியோடை போராட வேண்டிய நிலை வந்து வீரமரணமடைந்து விட்டார்கள்.
அது
பெரும் சோகம். அந்தச் சோகத்தைத் தாங்க முடியாத அண்ணை(தலைவர்) சொன்னார்
‘நாங்கள் இந்தக் காட்டிலையிருந்து வெளியேறுகிறவரை, ‘அவர்கள் நினைவாக‘
உப்பில்லாமலே சாப்பிடுவம்‘ என்று.
அதுக்குப்பிறகு இரண்டு மாசங்களுக்கு மேலை, நாங்கள் உப்பேயில்லாத பருப்புக்கறியும் சோறும்தான் சாப்பிட்டனாங்கள்.
'என்னண்டடா அதைச் சாப்பிட்டனிங்கள்? அண்ணையும்(தலைவர்) அதையே சாப்பிட்டவர்?'
'அண்ணையைப்
பற்றி என்ன நினைக்கிறிங்கள்? அவர் ஒரு நாளும் பாரபட்சம்
பார்க்கிறதேயில்லை. எல்லாருக்கும் என்ன சாப்பாடோ அதைத்தான் அவரும்
சாப்பிடுவார். அவருக்கெண்டு ஒரு ஸ்பெஷல் சாப்பாடும் ஒருநாளும்
செய்யிறேல்லை. உப்பில்லாத பருப்புக்கறியும் சோறும்தான் அண்ணையும் அந்த
இரண்டு மாசங்களுக்கு மேலான நித்தியகுளக் காட்டுவாழ்க்கையிலை சாப்பிட்டவர்.“
என்றான்.
சந்திரவதனா
07.11.2023
No comments:
Post a Comment