Captain Mayuan (Saba)

Captain Mayuan (Saba)

Sunday, May 24, 2020

மணலாறு முல்லையின் முன்னைய முற்றுகை அத்தியாயம்

இந்திய அமைதிப்படை காலத்தில் மிக இறுக்கமாக முற்றுகை நடத்தப்பட்ட பகுதி முல்லைத்தீவு – திருகோணமலை எல்லை பகுதியான மணலாறு காடுகள்.
புலிகளின் முடிவுரையை எழுத போகின்றோம் என்று “கார்பெட் போர்மிங்” செய்ய போகின்றோம் என்று சொல்லி கொண்டு இந்தியா என்ற பெரு தேசம் தனது முப்படையையும் இறக்கியது.

40 000 க்கு மேற்பட்ட துருப்புகள்.
20 க்கு மேற்ப்பட்ட விமானங்கள்

பலமான ஆயுதங்கள் இவ்வளவும் யாருக்காக ?
புலிகளின் தலைவரை கொல்ல /அல்லது உயிருடன் பிடிக்க என சர்வ சாதாரணமாக எண்ணி இறங்கியது இந்திய படை.

ஒரு தலைவர் மற்றும் அவருடன் அக் காட்டுக்குள் வெறும் 100 வீரர்கள்.

1987 இல் மணலாறு உதயபீடம் முகாமில்
நிற்பவர்கள் இடமிருந்து வலமாக
டேமியன்,  சயந்தன், தலைவர் பிரபாகரன் 
இருப்பவர்கள் இடமிருந்து வலமாக
லெப் கேணல் ரொபேர்ட் (அல்லது வெள்ளை),   ஈஸ்வரன் மாஸ்டர், கப்டன் மயூரன்,  லோலோ
உண்மையில் அன்று இந்திய ராணுவம் அப்பகுதியை வெளிபகுதி போராளிகளின் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தி தான் இருந்தது.உணவோ ,மருத்துவ உதவியோ,தகவல் பரிமாற்றமோ மிகவும் கடினமானது.
இப்படி முற்றுகையை இறுக்கிய இந்திய அரசு ,அதே வேளை தமிழகத்தில் இருந்த போராளிகள் மூலம் பிரபாகரன் அவர்கள் சரணடைய டீல் பேசியது.
  1. புனர்வாழ்வு பணிகளுக்கு 500 கோடி
  2. புலிகளுக்கு 200 கோடி
அன்று (1987 ) இந்த கோடிக் கணக்குகள் அன்றையை பணமதிப்பை பொறுத்த வரை மிக பெரிய தொகை.
ஆனால் பணத்துக்காக அன்று அவர்கள் மக்களின் உரிமையை நிலத்தை அடகு வைக்க முடிவெடுக்கவில்லை.
இதே வேளை சில தளபதிகள் தலைவரை பாதுகாப்பாக வெளியே தப்ப வைக்கும் முயற்சியை திட்டமிட்டார்கள்.

  1. பணம் வாங்கி கொண்டு சரணடையும் முடிவு
  2. தப்பி ஓடும் திட்டம்
இரெண்டையும் பிரபாகரன் அவர்கள் ஏற்க்கவில்லை.மாறாக இந்திய இராணுவத்துக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தி மீண்டும் இவ்வாறான நினைப்பு அவர்களுக்கு வராதபடிசெய்ய வேண்டும் என நினைத்தார்.
"ஒரு கோழையை போல நான் மட்டும் தப்பி செல்வதை நான் விரும்பவில்லை.ஒரு வீரனாக போரிட்டு சாவதையே விரும்புகின்றேன். இந்த மணலாறு பண்டாரவன்னியன் போன்ற வீரர்கள் திரிந்த காடு. போராடி வெல்வேன் அல்லது வீரச்சாவடைவேன். எனக்கு பிறகு இன்னொரு பிரபாகரனோ பிரபாகரியோ தலைமையேற்று வழி நடத்த வேண்டும்”
அன்றும் வெள்ளைக்கொடி
ஒருவேளை அன்று பிரபாகரன் வெள்ளை கொடியுடன் இந்திய படைகளிடம் சரணடைந்தால் சுட்டு கொள்ளும் படி ராஜீவ் சொன்னதாகவும் இராணுவ தளபதிகள் மறுத்ததாகவும் செய்திகள் உண்டு.

மணலாறு முற்றுகையை உடைத்த ஜொனி மிதி வெடிகள்
ஜொனி என்பது புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர்.இந்திய அரசால் நய வஞ்சகமாக கொல்லப்பட்ட தளபதி.

ஒரு தரைப்படை வீரனை கனவிலும் அச்சுறுத்துவது மிதிவெடிகளும் பொறிவெடிகளும் கண்ணிகளும் தான். இப்படியான சந்தர்ப்பங்களில், தூக்கிய ஒருகாலைக் கீழே வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு படைவீரன் செத்துப் பிழைக்கின்றான். இந்த மிதிவெடிகளை, எறும்புக்கூட்டம் போல வரவிருக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால் நல்ல பலனைக் காணலாம்.

ஆனால் உயர் தொழில்நுட்பத்துடன் உற்பத்திசெய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் இத்தகைய மிதிவெடிகளுக்கு நாம் எங்கே போவது? தலைவரது கனவிலும் -நினைவிலும் இந்தக் கேள்வியே உதித்து விடைதேடப் போராடியது. ஒரு நாள் அதிகாலை நான்கு நான்கரை மணியிருக்கும் காட்டுப் பாசறையில் தனது படுக்கையில் இருந்தபடி சிந்தித்துக் கொண்டிருந்த தலைவர் அவர்கள் திடீரென எழுந்து, சில நூறுயார் தள்ளி இருந்த பாசறையில் தங்கியிருந்த இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் பொறுப்பாளர்களைத் தேடிச் சென்றார். தனது மனதில் தோன்றிய மிதிவெடித் தயாரிப்புப் பொறிமுறை பற்றி அவர்களுக்கு அப்போதே விளக்கிக்கூறினார்.

காட்டிலேயே கிடைக்கக்கூடிய மரத்தடி-ரின் பால்ப்பேணி, மற்றும் றபர்பான்ட்’ என்பவற்றைக் கொண்டு, சிறுபிள்ளைகள் விளையாடும் ‘கெற்றப்போலின்’ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மிதிவெடிகளைத் தயாரிக்க முடியும் என்று தலைவர் விளக்கி நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார். பரீட்சார்த்த முயற்சிகள் தொடங்கின. சிறுதொகையில் வெடிமருந்தும், ‘பென்டோச்’ பற்றரியும், டெற்றொனேற்றரும்’ தவிர மிகுதி அனைத்துப் பொருட்களும் உள்ளூர்ப் பொருட்கள். இறுதியில் முயற்சி வெற்றிகண்டது.

இப்போது இந்தியப் படைகள் மணலாற்றுக் காட்டைச் சூழ பல்லாயிரக் கணக்கில் விரைவாகக் குவிக்கப்பட்டனர். அதற்கு ஒப்பறேசன் செக்மேற் எனப் பெயரிட்டனர். மெதுவான வேகத்தில் மிதிவெடி தயாரிப்புத் தொடங்கியது. அந்த மிதிவெடிக்குத் தலைவர் பெயரிட்டார் ஜொனி மிதிவெடி. இந்தியப் படைகள் காட்டுச் சமரைத் தொடங்கிவிட்டன. ஜொனிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு காட்டுக்குள் நுழைந்த இந்தியப் படைக்கு, ‘ஜொனி மிதிவெடி’கள் நம்பிக்கைத் துரோகம் செய்யத் தொடங்கிவிட்டன.

ஜொனியின் பயணத்தை நயவஞ்சகமாகப் பயன்படுத்தி ‘பாதை’ கண்டுபிடித்த இந்தியப் படைகளுக்கு இப்போது, ஜொனி மிதிவெடிகள் பாதத்தைக் கழற்றிக் கொண்டிருந்தன. இந்தியப் படைகள் எண்ணியதைப் போல தலைவரை அழிக்க முடியவில்லை. செக்மேற் 1……2……3 என இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது. 100……200……300 என இந்தியப் படைகளின் கால்களும் கழற்றப்பட்டன. ‘செக்மேற்’ அவமானத்துடன் முடிந்தது.

மணலாறு முற்றுகை முறியடிக்கப்பட்டது.
இதே சம்பவம் மீள முள்ளிவாய்காலில் நிகழ்ந்தது.இந்திய நேரிடையாக மூக்கு உடைபடாமல் மறைமுகமாக பல வல்லரசுகளுடன் மீள நய வஞ்சகம் செய்தன.

முள்ளிவாய்க்கால் முற்றுகை இன்னும் பல விடை சொல்லாத கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.

Quelle - Eelamalar 
March 27th, 2020 12:00 AM