Captain Mayuan (Saba)

Captain Mayuan (Saba)

Tuesday, February 11, 2025

பிறேமராஜன் மாஸ்டர் – ஆலமரமும் அதன் விழுதுகளும்…

விமலன் 

 

பிறேமராஜன் (தீட்சண்யன்) 30.01.1958-13.05.2000
ஆங்கில ஆசிரியர், கவிஞர், த.ஈ.வி.பு. புலனாய்வுத்துறை
கப்டன் மயூரன் அவர்களின் மூத்த சகோதரன்
 

ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன்.

பிறேமராஜன் மாஸ்டரின் அர்ப்பணிப்புகள், தியாகங்கள் முழுவதையும் எழுத்தில் வடிப்பதென்றால் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பதென்றே தெரியவில்லை. நான் எழுதியதில் ஆதியுமில்லை, அந்தமுமில்லை என்பதே உண்மை. நடுவில பல பக்கங்களைக் காணோம் என்ற நிலையும் உண்டு. ஏதோ என்னுடைய நினைவிற்கும் அறிவிற்கும் தெரிந்த சிலவற்றையாவது பகிர்ந்து கொள்வதில் ஆறுதலடைகிறேன்.

வரலாறு என்பது தனிநபரின் பார்வைக்குள் அடக்கி விட முடியாதது. 1988 களில் எனது அப்பா மூலம் முதற் தடவையாக பிறேமராஜன் மாஸ்டரைப் பற்றி அறிந்திருந்தேன். அவருடைய அப்பாவும் எனது அப்பாவும் நெருங்கிய உறவினராக(அத்தான் முறை ) இருந்ததோடு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தார்கள். இருவருக்கும் ஒரே வயது (1933). ஒன்றாகப் படித்திருந்தார்கள். அழகு(அழகரத்தினம்), தியாகு( தியாகராஜா) ஆகிய இருவருடைய நாட்டுப் பற்றும் ஒன்றாகவே இருந்து வந்திருந்தன. இருவருடைய குடும்பங்களும் அதற்காகப் பல தியாகங்களையும் செய்துள்ளன

1988 காலப்பகுதியில் எமதூரில் விடுதலைப்புலிகளின் முதல் நின்ற அணி செல்ல, புதிய அணியொன்று வந்திருந்தது. அவர்கள் தும்பளை நாற் சந்தியில் அமைந்திருந்த சதாசிவம் பரியாரியரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். அவ் வீடு எமது வீட்டுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்றது. அவ்வணிக்கு மொறிஸ் அவர்கள் தலைமை தாங்கி வந்திருந்தார். அவர் என்னை முதன்முதலாகக் கண்டபோது யார் என்று வினவினார். நான் என்னுடைய பெற்றோரையும் சகோதரர்களையும், எனது வீட்டையும் அவருக்கு அடையாளப் படுத்தினேன். உடனே அவர், தான் எனது உறவினன் என்றும், என்னுடைய வீட்டில் தான் இங்கு இருப்பதாக சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார். இந்திய இராணுவக் காலப்பகுதியில் பருத்தித்துறையில் இருந்த புலிகளின் அணி, சுழற்சி முறையில் எமது ஊரிலிருக்கும் எல்லோருடைய வீட்டிலும் தங்குவார்கள். அதை அவர்கள் வழமையாகவே வைத்திருந்தார்கள். ஒருவேளை, யாராவது இவர்களை இராணுவத்துக்கு காட்டிக் கொடுக்காமல் இருப்பதுக்காகவோ தெரியாது.

1988களில் இந்திய இராணுவத்துடனான மோதல்கள் தீவிரம்பெற்றிருந்த வேளையில் எனது இரண்டாவது அண்ணன் ரவி (மேஜர் தாகூர் ) திருகோணமலைக் காட்டிலிருந்து மணலாற்றுக்கு தலைவரிடம் வந்திருந்தார். அவ்வேளை அவர், முள்ளியவளைக்கு பணியின் நிமித்தம் வந்து போவதுண்டு. அப்போது பிறேமராஜன் அத்தான் வீட்டிற்கும் அவர் வந்து போவதுண்டு.

1988களில் மிகக் கடினமான பயணங்களை மேற்கொண்டு என் அப்பா, என் அண்ணா( ரவி-மேஜர் தாகூர்) வைச் சந்திப்பதற்காக வற்றாப்பளையிலிருக்கும் பிறேமராஜன் மாஸ்ரர்(அத்தான்) வீட்டுக்கு வந்து போவார். 1996 இல் நாங்கள் புதுக்குடியிருப்பில் இருக்கும் பொழுது பிறேமராஜன் மாஸ்ரருடன் மேலும் அதிகமாக நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்கள் எங்களுக்கு வாய்த்தன. அவருடன் அவருடைய வீட்டில் சில காலங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தேன். அவ்வேளை நானும், அவருடைய உறவினரான ரூபன் மற்றும் வாசு ஆகியோரும் ஒன்றாக அங்கு தங்கி இருந்தோம். அவர் மட்டுமே வீட்டிலிருப்பார். மற்றைய குடும்ப உறுப்பினர்கள் வவுனியாவுக்குச் சென்றிருந்தார்கள்.

அவருடைய வீட்டு வெளிவாசலில், வற்றாப்பளைச் சந்தியில், நீண்ட பனங்குற்றி ஓன்று இருக்கையாகப் போடப்பட்டிருந்தது. பின்னேரம் 5 மணியளவில் அவர் வெளியே சென்று அக்குற்றியில் அமர்ந்து அவ்வூர் மக்களோடு அளவளாவுவார். அவர் சாதாரண பாமரமக்கள் தொடக்கம் புத்திஜீவிகள், போராளிகள், ஏழைகள், பணக்காரர்கள் என எல்லோருடனும் சாதி மத பேதமேதுமின்றி, எந்தவித பாகுபாடும் காட்டாது மிகவும் அன்பாகவும் அவ்வூராருக்கான நகைச்சுவைப் பாணியிலும், தனக்கேயுரிய நகைச்சுவைப்பாணியிலும் அவரவர்க்கேற்ப பேசிக் கொண்டிருப்பார். ஒவ்வொருவருக்கேற்ற மாதிரி அவர்களின் பாணியிலேயே கதைப்பார். அவருடன் இருக்கும் போது என்னை மறந்து சிரித்துக் கொண்டேயிருந்திருக்கிறேன்.

அவருடன் தங்கியிருந்தவேளையில், அவருடைய தமிழ், ஆங்கிலப் புலமை, பொது அறிவு, அறிவியல் என எல்லாப் புலமைகளையும் அந்த ஒரு மனிதரில் ஒன்றாகக் கண்டு வியந்திருக்கிறேன்.

அப்போது பிறேமராஜன் மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்புப் பிரிவொன்றின் முக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரால் பல ஆங்கிலப் புத்தகங்கள் (போராட்டம், புலனாய்வு, போரியல், அறிவியல், அரசியல்) தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தக வடிவில் ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. அத்தோடு இல்லாமல் பல ஆங்கிலத் திரைப்படங்கள் கூட தமிழ் மொழிபெயர்ப்போடு அங்கு வெளிவருவதற்கு அவருடைய பணிகள் காத்திரமாக அமைந்திருந்தன.

அவருடைய கவிதைகள், பட்டிமன்றம் போன்ற சிறப்பான நிகழ்வுகள் புலிகளின் குரல் வானொலியில் அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இவர் அதிகம் வெளியில் தெரியாதவராகவே `தீட்சண்யன்´ என்ற புனைபெயரிலேதான் தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டு வந்திருந்தார்.

இவர் ஓர் சிறந்த ஆங்கில ஆசிரியராகவேதான் பருத்தித்துறையிலிருந்து முள்ளியவளைக்கு வந்திருந்தார். பின்னர் அங்கேயே தனது நிரந்தர வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவருடைய மனைவியும் அவருக்கேற்ற ஒரு சிறந்த துணைவியராகவே இருந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையும் பிறந்திருந்தார்கள். மூன்றாவது மகன் பரதன் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் படையணியில் இணைந்து, கப்டன் தரத்தில், இறுதியுத்தத்தில் இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் வீரமரணத்தைத் தழுவியிருந்தார். தனது தம்பியரில் ஒருவனான மொறிஸ் இன் இயற்பெயரான பரதராஜன் என்னும் பெயரையே சுருக்கி பரதன் என இந்த மகனுக்குப் பெயர் சூட்டியிருந்தார்.

பிறேமராஜன் அத்தான் குடும்பம் எங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர் என்று சொன்னால் மிகையாகாது. இடப்பெயர்வால் நாங்கள் புதுக்குடியிருப்புக்கு வந்த போது அங்கு உறவினர்கள் என்று சொல்ல அவர் குடும்பம் மாத்திரமே இருந்தது.

அவருடைய இரு சகோதரர்கள் எம் மண்விடுதலைக்காக விடுதலைப்புலிகளுடன் இணைந்து களமாடி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டவர்கள்.

அவர்களில் ஒருவர் கப்டன் மொறிஸ்
இவர் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989 இல் இந்திய இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார்.

மற்றையவர் கப்டன் மயூரன்
இவர் தலைவரின் நேரடி ஜாக்கெட் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தார். 1993 இல் தவளைப்பாய்ச்சல் என்று புலிகளினால் பெயர்சூட்டி நடாத்தப்பட்ட பூநகரி இராணுவமுகம் தாக்குதலில் சைவர் படையணியில் இருந்து தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார். இவருடைய நினைவாகவே பதுங்கிச் சுடும் படையணிக்கு “மயூரன் பதுங்கிச் சுடும் படையணி” என்று விடுதலைப்புலிகளினால் பெயரிடப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படையணியானது விடுதலைப்புலிகளின் முதன்மையான பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு பெரும் வலுச் சேர்த்திருந்தது. கூடவே இப்படையணியானது வெளியே அதிகம் தெரியாதவகையில் தங்களது காத்திரமான பணிகளையும் செய்து முடித்திருந்தது.

விமலன்  (விமலன், பிரிகேடியர் மணிவண்ணனினதும் சுரங்கத்தாக்குதலில் வீரமரணமடைந்த மாவீரன் தாகூரினதும் சகோதரன்)

Sunday, February 9, 2025

ஈழப்போரில் புலிகளால் அணியப்பட்ட உடற்கவசங்கள் யாவை?


நன்னிச்சோழன்


  • தலைச்சீரா - Helmet

இவர்களின் தலைச்சீராப் பயன்பாடானது, சிங்களத்தின் வெற்றியுறுதி(ஜெயசிக்குறு) என்ற தோல்வியில் முடிந்த நடவடிக்கைக் காலத்திலே தொடங்கப்பட்டு விட்டாலும் நான்காம் ஈழப்போர்க்காலத்தில்தான் பரவலாக பயன்படுத்தப்பட்டது (எல்லோராலும் அல்ல). இவர்களின் தலைச்சீரா சிங்களத்தின் தலைச்சீரா போன்றே இருந்தாலும், உருமறைப்பு மூலம் அவர்களிடம் இருந்து வேறுபடுத்தப்பட்டிருந்தது. அந்த உருமறைப்பு வழக்கமான புலிகளின் வரியே ஆகும்.

→சன்னத்தை தகைக்கும் வலிமை:

2009 ஆண்டுவரை சிங்களத்திடம் இருந்த தலைச்சீராவின் வலிமை எவ்வளவோ, அவ்வளவே இதனுடைய வலிமை ஆகும்.

'புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒருதொகை தலைச்சீராக்கள்'

'தலைச் சீராவின் வெளிப்புறம் | பக்க மண்டை'

'தலைச்சீராவின் உட்பகுதி'

'தலைச்சீராவின் ஒருபக்க மண்டைக்கான உட்பகுதி '

'ஜெயசிக்குறு எதிர்ச்சமரில் புலிகளின் கிட்டு பீரங்கிப் படையணியின் கணையெக்கி(mortar) பிரிவு படையினர் | இவர்கள் தலையில் தலைச்சீரா அணிந்துள்ளதைக் காண்க.'

'நான்காம் ஈழப்போரில் புதுக்குடியிருப்புச் சமரில் ஈடுபட்டுள்ள புலிவீரன் | தலையில் தலைச் சீரா அணிந்துள்ளதை நோக்குக'


  • சன்ன எதிர்ப்புக் கஞ்சுகம் - Bullet resistant vest

புலிகள் 3 வகையான சன்ன எதிர்ப்புக் கஞ்சுகங்களை அணிந்திருந்தனர்.

  1. கவசக் கத்தனம் - Armour jacket (Flack jacket)
  2. கவசத்தட்டுக் காவி - Armour plate carrier
  3. மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவி - Armour plate carrier - Concealable armour plate carrier

1) கவசக் கத்தனம் - Flak jacket:

90களின் இறுதியிலிருந்து 2005-இற்கு முன் வரை சாதாரண புலிவீரர்கள் சிறிலங்கா படைத்துறையிடமிருந்து இருந்து கைப்பற்றப்பட்ட கவசக் கத்தனங்களையே சமர்க்களங்களில் அணிந்து வந்தனர். (அதற்குப் பின்னரான காலப் பகுதியிலும் ஒருசிலர் அணிந்தனர் என்பது வேறு விடையம்)

90களின் தொடக்கத்தில் தவிபு இயக்கத் தலைவரின் மெய்க்காவலர் பிரிவினர் இவர்களிடம் இருந்து வேறுபட்டு முற்றிலும் உள்நாட்டிலே உண்டாக்கப்பட்ட கவசக் கத்தன அணிந்திருந்தனர். அதற்கு மேல் தாக்குதல் கஞ்சுகங்களை(assualt vest) அணிந்தனர்.

'90களின் தொடக்கத்தில் தலைவரின் மெய்யக்காவலர் பிரிவினர்'

'தலைவரின் விளிம்புக்கவியினை வைத்துப் பார்க்கும் இப்படத்தின்(திரைப்பிடிப்புத்தான்) காலம் போது 93க்குக் கிட்டவாக இருக்கும் என்று நினைக்கிறேன். '

இதில் முன்னால் நிற்கும் அந்த ஜக்கட் மெய்க்காவலன் கப்டன் 'மயூரன்' ஐ நோக்கவும். அவர் அணிந்திருக்கும் கவசக் கத்தனமானது மேலே இருக்கும் கவசக் கத்தனத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். ஏனெனில் இதில் சோளியல்கள் ஏற்கனவே தைக்கப்பட்டுள்ளனன. அது மட்டுமல்லாமல் இதில் மற்றொன்றும் தெரிகிறது. அதாவது மேலே உள்ள படத்தில் இருக்கும் மெய்க்காவலர் யாரும் மரும உறுப்பிற்கான சன்ன எதிர்ப்பு உறுப்பினை மெய்க்கவசத்துடன் சேர்த்து பிணைக்கவில்லை. ஆனால் இவர் அதைப் பிணைத்துள்ளார்.

'எசு.பி.யீ-9 (SPG-9) என்ற பின்னுதைப்பற்ற சுடுகலனை தாணிக்கும்(load) தவிபு-இன் விக்டர் கவச எதிர்ப்புப் படையணிப் போராளிகள். | இவர்கள் தலையில் தலைச்சீராவும் உடலில் சிறீலங்கா இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட கவசக் கத்தனமும் அணிந்துள்ளதைக் காண்க. | படம் - 3ம் ஈழப்போரின் ஆனையிறவுச் சமர்க்களம். '

'106மிமீ எம்40ஏ1 என்ற பின்னுதைப்பற்ற சுடுகலனை தாணிக்கும் தவிபு-இன் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின் போராளிகள். | இவர்கள் தலையில் தலைச்சீராவும் உடலில் சிறீலங்கா படைத்துறையிடமிருந்து கைப்பற்றப்பட்ட கவசக் கத்தனமும் அணிந்துள்ளதைக் காண்க. | படம் - 3ம் ஈழப்போர் காலம். '

ஆனால் இக்கால கட்டத்தில் தலைவரின் மெய்க்காவல் பிரிவினர் உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட ஒரு விதமான சோளியல்கள் கொண்ட கவசக் கத்தனங்களை அணிந்திருந்தனர். அவை வழக்கமான வரியில் இல்லாமல் சிறீலங்காத் தரைப்படையின் உருமறைப்பில் இருந்தன.

'முன்பக்கம் இங்கு தெரிகிறது. வீரனின் வயிற்றுப் பகுதியைக் காணவும். சன்னக்கூட்டுச் சோளியல்(magazine pouch) தெரிகிறது.'

'இஃது அக்கவசக் கத்தனத்தின் பின்பக்கம் ஆகும்'

இதே காலகட்டத்தில் சில வேளைகளில் புலிகளின் மெய்க்காவலரும் சிங்களத்தின் கவசக் கத்தனத்தினை அணிந்திருந்தனர்.

'தலைவர் ஏந்தியிருப்பது மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.- 103'

கவசக் கத்தனங்களை ஆண் & பெண் என இரு பாலரும் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

'கிட்டு பீரங்கிப் படையணியின் மகளீர் பிரிவுப் போராளிகள் தெறோச்சியை(Howitzer) இயக்கும் காட்சி | வலது ஓரத்தில் நிற்கும் போராளி கவசக் கத்தனத்தினை அணிந்திருப்பதை நோக்கவும்.'

இவற்றைப் போலவே போல புலிகள் 2001-ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்திலிருந்து 2005 வரை மற்றொரு விதமான சிறீலங்கா இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட அவர்களின் உருமறைப்பினை (சிறீலங்கா படைத்துறை படைப்பிரிவுகளில் ஒன்றான 'சிறப்பு பணிக்கடப் பிரிவு' (STF) இன் உருமறைப்பு) கொண்டதோர் கவசக் கத்தனத்தினை அணிந்திருந்தனர். அதனைக் கீழ்க்கண்ட படத்தில் காணவும் .

'ஜக்கெற் மெய்க்காவலர்களான இ: கவியுகன்; வ: லெப் கேணல் வள்ளுவன் | இவ்விரு மெய்க்காவலரும் கையில் ஏந்தியிருப்பது மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.74u துமுக்கி . இவர்கள் இருவரும் அந்த விதமான கவசக் கத்தனத்தினைத் தான் அணிந்துள்ளனர்.'

இதேபோலல்லாமல் சிங்களத்தின் உருமறைப்பைக் கொண்ட இன்னொரு விதமான கவசக் கத்தனமானது, தலைவரின் மெய்க்காவலர் பிரிவினரால் மட்டும் நான்காம் ஈழப்போரில் அணியப்பட்டது. இதுவும் உள்நாட்டு மானுறுத்தமே!

'தலைவர் குறிவைக்கப் பயன்படுத்தும் துமுக்கி-திராகுனோவு குறிசூட்டு துமுக்கி(dragunov sniper rifle)'

'தலைவர் குறிவைக்கப் பயன்படுத்தும் துமுக்கி-மாற்றியமைக்கப்பட்ட ஏ.கே.103'

மேற்கண்ட இரு படங்களிலுமுள்ள மெய்க்காவலரை நோக்கவும். இக்கவசக் கத்தனத்தின் முன் தட்டுக்காவி எப்படி இருக்கும் என்று அறியேன். ஆனால் பின்பகுதியின் தோட் பகுதியில் இருதோள்களிலும்(வலது,இடது) தலா இரண்டு சோளியல்கள் என மொத்தம் நான்கு சோளியல்கள் உள்ளன. அவை துமுக்கிக்கான சன்னக்கூடு வைக்கும் சோளியல்கள் ஆகும். இவை அவசரகால சோளியல்கள்(emergency pouch) எனப்படும். இவையே புலிகளால் உண்டாக்கப்பட்ட முகனையான(modern) சன்ன எதிர்ப்புக் கஞ்சுகங்களாகும். அவற்றையே தலைவரின் மெய்க்காவல் பிரிவினர் தொடர்ந்து இறுதிவரை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2) கவசத்தட்டுக் காவி - Armour plate carrier

நான்காம் ஈழப்போரில் புலிகளின் உள்நாட்டு மானுறுத்த(manufacture) கவசத்தட்டுக் காவி மூன்று தட்டுகளைக் கொண்டதாக உண்டாக்கப்பட்டது. இவை பன்னாட்டு கவசத்தட்டுக் காவிகளின் வடிவிற்றான் இருந்தன. ஆனால் இவற்றின் உருமறைப்பானது(camouflage) முந்தையவற்றைப் போலல்லாமல் புலிகளின் வரியில் ஆக்கப்பட்டிருந்தது. புலிகளின் இந்த சன்ன எதிர்ப்புக் கஞ்சுகத்தினுட் இருந்த "கவசத்தட்டுகள்" (armour plates) ஆனவை வெங்களியால்(ceramic) செய்யப்பட்டவை ஆகும். ஆனால் இதனோடு சேர்த்துக் கலக்கப்பட்ட கலவை யாதென்று தெரியவில்லை. தவிபு-ஆல் உள்நாட்டில் உண்டாக்கப்பட்ட இது பார்ப்பதற்கு மெச்சத்தக்கதாக இருக்கிறது.

இந்த சன்ன எதிர்ப்புக் கஞ்சுகத்தினுட் மொத்தம் 3 கவசத்தட்டுகள் இருந்தன.

  • முன் உறையினுட் இரு தட்டுகள் - பெரிய மெல்லியது ஒன்றும் சிறிய தடிமனானது ஒன்றும்
  • பின் உறையினுட் ஒரு தட்டு - பெரிய மெல்லியது ஒன்றும்

இருந்தன. ஆனால் இதற்குள் பக்கத் தட்டுகள் எதுவுமே இல்லை. அதற்குப் பகரமாக பெரியதான முன்றட்டும் பின்றட்டும் 'கான்னிலவு' (quater moon) வடிவில் வளைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு வளைக்கப்பட்டிருந்தமையால் பக்கத் தட்டுகளிற்கான தேவை குறைக்கப்பட்டது. தட்டுகளின் விளிம்புகள் தடித்த மின்நாடாக்கள்(electric tape) கொண்டு ஒட்டப்பட்டிருந்தன.

→ முன் பக்க மெல்லிய பெரிய தகடு:-

இதை தட்டிய போது ஒரு வித வேறுபாடான ஓசை எழும்பியது

உட்புறம்:

வெளிப்புறம்:

→ முன் பக்க தடித்த சிறிய தகடு:-

இதை தட்டிய போது பெரிய தட்டினை விட வேறுபட்ட ஒரு வித ஓசை எழும்பியது.

→ பின்பக்க மெல்லிய பெரிய தட்டின் படம் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை!

ஈ கவசத்தட்டுக் காவியானது முன் தட்டுக்காவி, பின் தட்டுக்காவி(back plate carrier) என இரு துண்டுகளக இருக்கும். இவற்றின் முன் தட்டுக்காவியினுள்(front plate carrier) உள்ள இரு தட்டுகளின் பெரிய மெல்லிய தட்டு வெளியில் இருந்து முதலாவதாகவும் சிறிய தடித்த தட்டு இரண்டாவதாகவும் இருக்கும். இந்தச் சிறிய தடித்த தட்டும், பெரிதுக்குள் தன்னை அகப்படுத்திக்கொள்ள ஏதுவாக சற்று வளைந்தே இருக்கும். இந்த தட்டுக் காவியின் அடிப்பகுதியில் இருக்கும் வாயின் மூலமாகவே தட்டினை உள்ளுடுத்த வேண்டும்.

'விதம் ஒன்றினைச் சேர்ந்த கவசத்தட்டுக் காவியின் அடிப்பகுதி. அதன் வாயில் திறந்துள்ளதையும் அதனுள் தட்டுகள் தென்படுவதை நோக்கவும்'

'இதுதான் புலிகள் நான்காம் ஈழப்போரில் மானுறுத்திய மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவி | இது காவியின் முன்பக்கமாகும். இதே போல் தான் அனைத்து வரிக் காவிகளின் பின்பகுதியும் இருக்கும்'

இந்த முன் தட்டுக்காவியின் அடிப்பகுதியில் முதுகுப்பக்கத்திலிருந்து சுற்றிக் கட்டுவதற்கு ஏதுவாக யாத்துணி(ஒன்றோடொன்று பொருந்தி சேர்த்துக் கட்டும் துணி) எனப்படும் ஒரு துணியானது பளுப் (கமக்கட்டில் இருந்து நேர்கீழாக வரும் பக்கவாட்டுப் பகுதி) பகுதியில் தைக்கப்பட்டிருக்கிறது. அவ்விரண்டு துணியிலும் ஒரு பிணையொட்டி(velcro) இருக்கும். அந்த யாத்துணியின் உயரமானது சள்ளையில் (இடுப்பின் பக்கவாட்டில் உள்ள சதைப் பகுதி) இருந்து பளுவின் தொடக்கத்திற்கு சற்றுக் கீழே வரை எவ்வளவு உயரமோ, அவ்வளவே. இவ்வளவு உயரம் கொண்ட யாத்துணியானது முதுகின் தண்டுவடத்தை நோக்கிப் போகப்போக முக்கோண வடிவில் குறுகிச் சென்று சதுர வடிவ முடிவை அடையும். இதில் இடது பக்கத்தில் இருந்து வரும் யாத்துணி கீழ்ப்போக வலப்பக்க யாத்துணி மேற்போகும். (படத்தில் காண்க) அதே போலதான் தோளிலும். அத்தோட்டுணியிலும் (வலது,இடது) பிணையொட்டி உண்டு. அங்கு, முன் தட்டுக்காவியின் தோட்டுணி மேற்போக பின் தட்டுக்காவியின் தோட்டுணி கீழ்ப்போகும். மொத்தத்தில் பின் தடுக்காவியானது முன் தட்டுக்காவியினுட் அடங்கிக்கொள்ளுகிறது.

இந்த வகை கவசத்தட்டுக் காவியில் 4 விதம் இருந்தது.

  1. ஒன்றினது பின் தட்டுக்காவியில் சதுரவடிவிலான ஒரு பெரிய பையொன்று இருந்தது. அதற்கு அதன் அரைவாசி உயரமுள்ள மூடி இருந்தது. இதன் முன்பக்கம் வெறுமனே இருந்தது.
  2. மற்றொன்றில் வெளிப்புறத்தில் 4 சன்னக்கூடு வைப்பதற்கு ஏதுவாக 4 சோளியல்கள் இருந்தன. அந்த சோளியலின் வெளிப்புறத்தில் மேலொன்றும் கீழொன்றுமாக இரண்டு பிணையொட்டி குதைகள்(loops) இருந்தன. ஆனால் அதற்கான மூடியில் ஒரே ஒரு பிணையொட்டி கொளுவி(hook) மட்டுமே இருந்தது. இதன்மூலம் கீழே இருந்த பிணையொட்டிக் குதையில் மேலும் ஒரு சோளியல் தேவைப்படின் மாட்டப்பட்டிருக்கலாம். அதாவது பன்னாட்டு சன்ன எதிர்ப்புக் கஞ்சுகங்களில் உள்ள 8 சோளியல்கள் போன்று.
  3. பிறிதொன்றில் மேற்கண்ட இரண்டுமே கலந்த கலவை உள்ளது. அதாவது முன் தட்டுக்காவியில் பெரிய பையொன்றும் அதன் மேலே மூன்று சன்னக்கூட்டுச் சோளியல்களும் உள்ளன. ஆனால் அதில் மேலும் மூன்று சேர்ப்பதற்கான பிணையொட்டி காணப்படவில்லை.
  4. நான்காவதில் நான்கு சன்னக்கூடு வைப்பதற்கு ஏதுவாக நான்கு சோளியல்கள் மட்டும் இருந்தன. அதில் கூடுதலாக சோளியல்கள் சேர்ப்பதற்கு ஏற்ற கட்டமைப்புகள் இல்லை. இதற்கு கழுத்து காப்பு உள்ளது.

'விதம் ஒன்று கவசத்தட்டுக் காவி அணிந்து வகை-85 12.5 மி.மீ இயந்திரச் சுடுகலனால் எதிரி மீது சுடும் புலி வீரன்'

'வட போர்முனை முன்னரங்க நிலைகளில் ஒன்றில் வைத்து எடுக்கப்பட்ட படம். | நான்கு புலிவீரர்களும் சீருடையில் உள்ளனர்.'

மேற்கண்ட படத்தில் அம்புக்குறியிட்டுள்ள வீரரைக் பார்க்கவும். அவர் தலையில் தலைச்சீராவும்(helmet), உடலில் மேற்குறிப்பிட்டுள்ள விதம் மூன்றினைச் சேர்ந்த கவசத்தட்டுக் காவியினையும் அணிந்துள்ளார்.

விதம் நான்கின் படம் என்னிடம் இல்லை!

3) மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவி - Concealable armour plate carrier

'இவர்தான் மேஜர் மிகுதன். அன்னார் தமிழீழ அரசியற்றுறைப் பொறுப்பாளர் மாவீரராகிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் மெய்க்காவலர் ஆவார். அற்றை நாளில் இவரும் தமிழ்ச்செல்வனுடன் மாவீரரானார்.'

மிகுதன் அணிந்திருக்கும் கவசத்தட்டுக் காவியினை நோக்கவும். அதுதான் மறைக்கக்கூடிய கவசத்தட்டுக் காவியாகும். அதாவது மேற்சட்டையினுள் அணியும் வெளித்தெரியா சன்ன எதிர்ப்புக் கஞ்சுகம். இதனை அனைத்து மெய்க்காவலரும், ஒரு சில கட்டளையாளர்களும் அணிந்திருப்பர். அவர் கையில் வைத்திருப்பது தலைச்சீராவாகும்.

இவைதான் ஒட்டுமொத்தமாக தவிபுவால் அணியப்பட்ட மெய்க்கவசங்களாகும். கட்டுரையினை இறுதிவரை வாசித்தமைக்கு மிக்க நன்றி. _/\_


  • பிற்சேர்க்கை (11/30/2020)

கடற்சமர்க் களத்தில்

புலிகள் கடற்படையான கடற்புலிகளும் தலைச்சீரா, கவசக் கத்தனம் & கவசத்தட்டுக் காவி ஆகியவற்றினை கடற்சமர்களில் அணிந்திருந்தனர். இவர்கள் அணிந்த கவசக் கத்தனங்கள், சிங்களவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவையும், புலிகளால் உள்நாட்டில் மானுறுத்தப்பட்டவையும் ஆகும்.

'சிங்களத்திடம் இருந்து கைப்பற்றிய கவசக் கத்தனம் & தலைச்சீரா அணிந்து கடற்சமரில் ஈடுபட்டுள்ள கடற்புலிகள் | இவர்கள் நிற்பது டோறா மாதிரி குமுதன் வகுப்புக் கலத்தில்'

'உள்நாட்டில் மானுறுத்திய வரி கவசத்தட்டுக் காவி & தலைச்சீரா அணிந்து பீகே இயந்திரச் சுடுகலனால் சுடும் ஒரு கடற்புலி வீரன்'


  • பிற்சேர்க்கை (12/9/2020)

தலைவரின் மெய்க்கவசம்:

தலைவரிற்காக இறுதிநேரத்தில் காதிலிருந்து முழு மெய்யையும் கவர் செய்து எத்தகைய சிறு சன்னக்களையும் தகைக்கும் வகையில் பித்தளைகளை உருக்கி செய்யப்பட்ட ஓர் முற்றிலும் வேறுபட்ட உடற்கவசம் உண்டாக்கப்பட்டிருந்ததாக அவரது மெய்க்காப்பாளர் ரகு என்பவர் கூறியிருந்தார். இது தொடர்பான படங்கள் ஏதும் எனக்குக் கிடைக்கப் பெறவில்லை.

— தலைவரின் தலைமை மெய்க்காவலர் 'ரகு' என்பவர் கொடுத்த செவ்வியில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்.


Quelle : Quora

 

Friday, February 7, 2025

உப்பில்லாத பருப்புக்கறியும் சோறும்

 

உப்பில்லாப்பண்டம் குப்பையிலே என்பார்கள்.
 

அந்த முறை மாவீரன் சுசீலன் தான் கப்டன் மயூரனை Pajero  வாகனத்தில் அவனது சின்னக்கா பிரபாவிடம் கூட்டிக் கொண்டு வந்தான்.

 
“பிரபாக்கா, மயூரனுக்கு நல்லாச் சமைச்சுக் குடுங்கோ. நல்ல குளிர்ந்த சாப்பாடுகள் குடுங்கோ“ என்று சொல்லி விட்டுச் சென்றான். 
 
போன முறை சுசீலன் தனியாக மயூரனின் கடிததத்துடன் வந்த போது “பிரபாக்கா, மயூரன் சரியான சென்சிற்றீவ். எப்பவும் உங்களை, அம்மாவை, குடும்பத்தை... எண்டு நினைச்சுக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பார். கண் கலங்குவார். அதுதான் அண்ணை(தலைவர்) அடிக்கடி அவருக்கு லீவு குடுக்கிறவர். ‘போய் அம்மாவைப் பார்த்திட்டு வாடா‘ எண்டு சொல்லி அனுப்பிறவர். இப்ப அவர் முக்கியமான வேலையிலை நிற்கிறார். வரவே ஏலாது. அதுதான் கடிதம் கொணர்ந்தனான்...“ என்று சொன்னவன்.
 
இப்போது மயூரனோடு வந்திருந்தான். மயூரனின் அம்மா, அப்பா... ஒருவரும் அப்போது ஊரில் இருக்கவில்லை. இந்திய இராணுவத்தின் தொல்லை தாங்க முடியாது யாழ்ப்பாணத்துக்கு இடம் பெயர்ந்திருந்தார்கள்.
 
பிரபா வேலையில் நின்றாள். சுசீலனையும் மயூரனையும் வீட்டுக்குப் போகும்படி அனுப்பி விட்டு, விடயத்தைச் சொல்லி அவசர லீவு எடுத்துக் கொண்டு வீட்டுக்கு விரைந்து அவசரம் அவசரமாகச் சோறும் கறிகளும் சமைத்துக் கொடுத்த போது “நல்ல ருசியா இருக்கக்கா“ என்று சொல்லிச் சொல்லி மிகுந்த ஆசையோடு மயூரன் அவைகளைச் சாப்பிட்டான்.
 
அவன் அத்தனை ஆசையாகவும் ரசித்தும் ருசித்தும் சாப்பிடுவதைப் பார்க்க, அவனது சின்னக்கா பிரபாவுக்கு மனசு நிறைந்து ஆனந்தத்தில் கண்கள் கலங்கின. நிறைந்த திருப்பியோடுதான், தான் சாப்பிடத் தொடங்கினாள். அப்போது தான் ‘கறிகளில் வழமையான சுவையில்லை‘ என்பதை உணர்ந்தாள். மரவள்ளிப் பிரட்டலுக்கு உப்பு துப்பரவாகக் காணாமல் இருந்தது. ‚அவசரத்தில் இப்படிச் சமைத்து விட்டேனே!‘ என்ற வருத்தத்துடன் “என்னடா இந்தச் சாப்பாட்டையே ‘ருசி, ருசி‘ எண்டு சொல்லிச் சாப்பிட்டனி? வாயிலையே வைக்கேலாமல் கிடக்குது. ஒரு சொல்லுச் சொல்லியிருந்தியெண்டால் மரவள்ளிக் கறிக்குள்ளை கொஞசம் உப்புத் தண்ணியைத் தெளிச்சுக் கலந்து விட்டிருப்பனே“ என்றாள்.
 
அதற்கு மயூரன் “உப்பு இல்லாட்டில் இப்ப என்ன? நாங்கள் உப்பில்லாமலும் சாப்பிடுவம்“ என்றான்.
 
ஏன் உப்பில்லாமல்..? பிரபா யோசனையோடு கேட்டாள்.
அப்போதுதான் மயூரன் அதைச் சொன்னான்.
 
“நாங்கள் நித்தியகுளம் காட்டுக்குள்ளை இருக்கக்கை எங்களுக்கு ஒவ்வொருநாளும்பருப்புக்கறியும் சோறும் தான் சாப்பாடு. ஒரு கட்டத்திலை நாங்கள் கொண்டு போன உப்பு முழுசா முடிஞ்சிட்டுது. 
 
அண்ணை(தலைவர்) உப்பு வாங்க இரண்டு போராளிகளை அனுப்பி வைச்சார். போனவர்கள் திரும்பவில்லை. இந்தியன் ஆமியியோடை போராட வேண்டிய நிலை வந்து வீரமரணமடைந்து விட்டார்கள்.
 
அது பெரும் சோகம். அந்தச் சோகத்தைத் தாங்க முடியாத அண்ணை(தலைவர்) சொன்னார் ‘நாங்கள் இந்தக் காட்டிலையிருந்து வெளியேறுகிறவரை, ‘அவர்கள் நினைவாக‘ உப்பில்லாமலே சாப்பிடுவம்‘ என்று.
 
அதுக்குப்பிறகு இரண்டு மாசங்களுக்கு மேலை, நாங்கள் உப்பேயில்லாத பருப்புக்கறியும் சோறும்தான் சாப்பிட்டனாங்கள்.
 
'என்னண்டடா அதைச் சாப்பிட்டனிங்கள்? அண்ணையும்(தலைவர்) அதையே சாப்பிட்டவர்?'
 
'அண்ணையைப் பற்றி என்ன நினைக்கிறிங்கள்? அவர் ஒரு நாளும் பாரபட்சம் பார்க்கிறதேயில்லை. எல்லாருக்கும் என்ன சாப்பாடோ அதைத்தான் அவரும் சாப்பிடுவார். அவருக்கெண்டு ஒரு ஸ்பெஷல் சாப்பாடும் ஒருநாளும் செய்யிறேல்லை. உப்பில்லாத பருப்புக்கறியும் சோறும்தான் அண்ணையும் அந்த இரண்டு மாசங்களுக்கு மேலான நித்தியகுளக் காட்டுவாழ்க்கையிலை சாப்பிட்டவர்.“ என்றான்.

சந்திரவதனா
07.11.2023

அம்மாவின் இழப்பு எமது தமிழ்ச் சமூகத்துக்கே பேரிழப்பாகும்!

Sivagamasunthary (Siva Thiyagarajah)
கப்டன் மயூரன் அவர்களின் தாயார்

ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வாழ்விடமாகவும் கொண்ட, மாவீரர்களான கப்டன் மொறிஸ், கப்டன் மயூரன், பிரேமராஜன்-மாஸ்டர் (தீட்ஷண்யன்-நாட்டுப்பற்றா ளர்) அவர்களின் தாயாரான திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள் தனது 88வது வயதில் ஜேர்மனியில் இன்று(18.05.2022) காலமானார்.  

கப்டன் மொறிஸ் – பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989இல் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடிமோதலின் போது வீரமரணத்தை அடைந்திருந்தார்.  

கப்டன் மயூரன் – இவர் எமது தேசியத் தலைவரின் பிரத்தியேக மெய்ப்பாதுகாவலராக பல வருடங்கள் சேவையாற்றி 1993இல் விடுதலைப் புலிகளால் திட்டமிடப்பட்ட பூநகரி இராணுவமுகாம் மீதான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையின்பொழுது இம்பிரான்- பாண்டியன் படையணியில் பங்காற்றி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார். இவரின் பெயரால் `மயூரன் பதுங்கிக் குறி பார்த்துச் சுடும் படையணி´ உருவாக்கம் பெற்றிருந்தது. 

 பிறேமராஜன் மாஸ்டர் – இவர் ஒரு சிறந்த இலக்கியவாதியாகவும் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப் பாளராகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்தவர். இவர் ´கவிஞர் தீட்சண்யன்` என்னும் புனை பெயரில் இலக்கிய வட்டத்தில் பெரிதும் பேசப் பட்டவர். இவருடைய படைப்புகளாக கவியரங்கம், சிறுகதைகள், கட்டுரைகள், மொழி பெயர்க்கப்பட்டபுலனாய்வு நூல்கள்.. என்று பலவிடயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரோடு தனது பெரும் காலத்தைக் கழித்திருந்தார். ஆதலால் பொது வெளியில் அவர் அதிகம் அறிமுகமாகியிருந்தவரில்லை. 

இவர்களின் அப்பாவுடன் இணைந்து அம்மாவின் போராட்டப் பங்களிப்பு என்பது பிள்ளைகளை நாட்டுக்காக உவந்தளித்தது மட்டுமல்லாமல்இன்னும் பலவழிகளிலும் இருந்தது. வவுனியாவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இராணுவ நெருக்கடிக்கு மத்தியிலும் PLOTE தேசவிரோத அணியினரின் முகாமுக்கு முன் வீட்டில் இருந்து கொண்டு புலனாய்வுப் போராளிகளை உபசரித்து இராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த போராளிகளைப் பாதுகாத்து அனுப்பியுமிருந்தார். அம்மாவும் சில காலத்துக்கு முன்னர் தனது வாழ்வியலின் அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார். அவரும் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை அப்புத்தகம் வாயிலாக நிறுவியுமிருந்தார். ஜேர்மனி நாட்டில் எமது தமிழ் குழந்தைகளுக்கு பல காலமாக ஜேர்மன் தமிழாலயம் ஊடாக எமது தாய்மொழியை சிறப்பாக போதித்தும் வந்திருந்தார். மேலும் அம்மாவின் இரு பெண்பிள்ளைகள் எமது தேசம் சார்ந்த படைப்புகளை (கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், IBC யில் வானொலி நிகழ்ச்சிகள்) படைத்திருந்ததோடு தாயகம் சார்ந்து தமிழர்புனர்வாழ்வுக்கழகம் – ஜேர்மன் கிளையினுடாக பல தாயகம் சார்ந்த தன்னார்வத் தொண்டுகளையும் சிறப்பாக ஆற்றியிருந்தனர். அம்மாவின் இழப்பு என்பது எமது தமிழ்ச் சமூகத்துக்கே பேரிழப்பாகும். அம்மாவின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். 

 -விமலன் அழகரத்தினம்

Sunday, May 24, 2020

மணலாறு முல்லையின் முன்னைய முற்றுகை அத்தியாயம்

இந்திய அமைதிப்படை காலத்தில் மிக இறுக்கமாக முற்றுகை நடத்தப்பட்ட பகுதி முல்லைத்தீவு – திருகோணமலை எல்லை பகுதியான மணலாறு காடுகள்.
புலிகளின் முடிவுரையை எழுத போகின்றோம் என்று “கார்பெட் போர்மிங்” செய்ய போகின்றோம் என்று சொல்லி கொண்டு இந்தியா என்ற பெரு தேசம் தனது முப்படையையும் இறக்கியது.

40 000 க்கு மேற்பட்ட துருப்புகள்.
20 க்கு மேற்ப்பட்ட விமானங்கள்

பலமான ஆயுதங்கள் இவ்வளவும் யாருக்காக ?
புலிகளின் தலைவரை கொல்ல /அல்லது உயிருடன் பிடிக்க என சர்வ சாதாரணமாக எண்ணி இறங்கியது இந்திய படை.

ஒரு தலைவர் மற்றும் அவருடன் அக் காட்டுக்குள் வெறும் 100 வீரர்கள்.

1987 இல் மணலாறு உதயபீடம் முகாமில்
நிற்பவர்கள் இடமிருந்து வலமாக
டேமியன்,  சயந்தன், தலைவர் பிரபாகரன் 
இருப்பவர்கள் இடமிருந்து வலமாக
லெப் கேணல் ரொபேர்ட் (அல்லது வெள்ளை),   ஈஸ்வரன் மாஸ்டர், கப்டன் மயூரன்,  லோலோ
உண்மையில் அன்று இந்திய ராணுவம் அப்பகுதியை வெளிபகுதி போராளிகளின் தொடர்பில் இருந்து தனிமைப்படுத்தி தான் இருந்தது.உணவோ ,மருத்துவ உதவியோ,தகவல் பரிமாற்றமோ மிகவும் கடினமானது.
இப்படி முற்றுகையை இறுக்கிய இந்திய அரசு ,அதே வேளை தமிழகத்தில் இருந்த போராளிகள் மூலம் பிரபாகரன் அவர்கள் சரணடைய டீல் பேசியது.
  1. புனர்வாழ்வு பணிகளுக்கு 500 கோடி
  2. புலிகளுக்கு 200 கோடி
அன்று (1987 ) இந்த கோடிக் கணக்குகள் அன்றையை பணமதிப்பை பொறுத்த வரை மிக பெரிய தொகை.
ஆனால் பணத்துக்காக அன்று அவர்கள் மக்களின் உரிமையை நிலத்தை அடகு வைக்க முடிவெடுக்கவில்லை.
இதே வேளை சில தளபதிகள் தலைவரை பாதுகாப்பாக வெளியே தப்ப வைக்கும் முயற்சியை திட்டமிட்டார்கள்.

  1. பணம் வாங்கி கொண்டு சரணடையும் முடிவு
  2. தப்பி ஓடும் திட்டம்
இரெண்டையும் பிரபாகரன் அவர்கள் ஏற்க்கவில்லை.மாறாக இந்திய இராணுவத்துக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தி மீண்டும் இவ்வாறான நினைப்பு அவர்களுக்கு வராதபடிசெய்ய வேண்டும் என நினைத்தார்.
"ஒரு கோழையை போல நான் மட்டும் தப்பி செல்வதை நான் விரும்பவில்லை.ஒரு வீரனாக போரிட்டு சாவதையே விரும்புகின்றேன். இந்த மணலாறு பண்டாரவன்னியன் போன்ற வீரர்கள் திரிந்த காடு. போராடி வெல்வேன் அல்லது வீரச்சாவடைவேன். எனக்கு பிறகு இன்னொரு பிரபாகரனோ பிரபாகரியோ தலைமையேற்று வழி நடத்த வேண்டும்”
அன்றும் வெள்ளைக்கொடி
ஒருவேளை அன்று பிரபாகரன் வெள்ளை கொடியுடன் இந்திய படைகளிடம் சரணடைந்தால் சுட்டு கொள்ளும் படி ராஜீவ் சொன்னதாகவும் இராணுவ தளபதிகள் மறுத்ததாகவும் செய்திகள் உண்டு.

மணலாறு முற்றுகையை உடைத்த ஜொனி மிதி வெடிகள்
ஜொனி என்பது புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவர்.இந்திய அரசால் நய வஞ்சகமாக கொல்லப்பட்ட தளபதி.

ஒரு தரைப்படை வீரனை கனவிலும் அச்சுறுத்துவது மிதிவெடிகளும் பொறிவெடிகளும் கண்ணிகளும் தான். இப்படியான சந்தர்ப்பங்களில், தூக்கிய ஒருகாலைக் கீழே வைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு படைவீரன் செத்துப் பிழைக்கின்றான். இந்த மிதிவெடிகளை, எறும்புக்கூட்டம் போல வரவிருக்கும் இந்தியச் சிப்பாய்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால் நல்ல பலனைக் காணலாம்.

ஆனால் உயர் தொழில்நுட்பத்துடன் உற்பத்திசெய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் இத்தகைய மிதிவெடிகளுக்கு நாம் எங்கே போவது? தலைவரது கனவிலும் -நினைவிலும் இந்தக் கேள்வியே உதித்து விடைதேடப் போராடியது. ஒரு நாள் அதிகாலை நான்கு நான்கரை மணியிருக்கும் காட்டுப் பாசறையில் தனது படுக்கையில் இருந்தபடி சிந்தித்துக் கொண்டிருந்த தலைவர் அவர்கள் திடீரென எழுந்து, சில நூறுயார் தள்ளி இருந்த பாசறையில் தங்கியிருந்த இராணுவ தொழில்நுட்பப்பிரிவின் பொறுப்பாளர்களைத் தேடிச் சென்றார். தனது மனதில் தோன்றிய மிதிவெடித் தயாரிப்புப் பொறிமுறை பற்றி அவர்களுக்கு அப்போதே விளக்கிக்கூறினார்.

காட்டிலேயே கிடைக்கக்கூடிய மரத்தடி-ரின் பால்ப்பேணி, மற்றும் றபர்பான்ட்’ என்பவற்றைக் கொண்டு, சிறுபிள்ளைகள் விளையாடும் ‘கெற்றப்போலின்’ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி மிதிவெடிகளைத் தயாரிக்க முடியும் என்று தலைவர் விளக்கி நம்பிக்கையூட்டிக் கொண்டிருந்தார். பரீட்சார்த்த முயற்சிகள் தொடங்கின. சிறுதொகையில் வெடிமருந்தும், ‘பென்டோச்’ பற்றரியும், டெற்றொனேற்றரும்’ தவிர மிகுதி அனைத்துப் பொருட்களும் உள்ளூர்ப் பொருட்கள். இறுதியில் முயற்சி வெற்றிகண்டது.

இப்போது இந்தியப் படைகள் மணலாற்றுக் காட்டைச் சூழ பல்லாயிரக் கணக்கில் விரைவாகக் குவிக்கப்பட்டனர். அதற்கு ஒப்பறேசன் செக்மேற் எனப் பெயரிட்டனர். மெதுவான வேகத்தில் மிதிவெடி தயாரிப்புத் தொடங்கியது. அந்த மிதிவெடிக்குத் தலைவர் பெயரிட்டார் ஜொனி மிதிவெடி. இந்தியப் படைகள் காட்டுச் சமரைத் தொடங்கிவிட்டன. ஜொனிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டு காட்டுக்குள் நுழைந்த இந்தியப் படைக்கு, ‘ஜொனி மிதிவெடி’கள் நம்பிக்கைத் துரோகம் செய்யத் தொடங்கிவிட்டன.

ஜொனியின் பயணத்தை நயவஞ்சகமாகப் பயன்படுத்தி ‘பாதை’ கண்டுபிடித்த இந்தியப் படைகளுக்கு இப்போது, ஜொனி மிதிவெடிகள் பாதத்தைக் கழற்றிக் கொண்டிருந்தன. இந்தியப் படைகள் எண்ணியதைப் போல தலைவரை அழிக்க முடியவில்லை. செக்மேற் 1……2……3 என இராணுவ நடவடிக்கை தொடர்ந்தது. 100……200……300 என இந்தியப் படைகளின் கால்களும் கழற்றப்பட்டன. ‘செக்மேற்’ அவமானத்துடன் முடிந்தது.

மணலாறு முற்றுகை முறியடிக்கப்பட்டது.
இதே சம்பவம் மீள முள்ளிவாய்காலில் நிகழ்ந்தது.இந்திய நேரிடையாக மூக்கு உடைபடாமல் மறைமுகமாக பல வல்லரசுகளுடன் மீள நய வஞ்சகம் செய்தன.

முள்ளிவாய்க்கால் முற்றுகை இன்னும் பல விடை சொல்லாத கேள்விகளை எழுப்பி நிற்கின்றன.

Quelle - Eelamalar 
March 27th, 2020 12:00 AM