Captain Mayuan (Saba)

Captain Mayuan (Saba)
Showing posts with label கப்டன் மயூரன். Show all posts
Showing posts with label கப்டன் மயூரன். Show all posts

Tuesday, February 11, 2025

பிறேமராஜன் மாஸ்டர் – ஆலமரமும் அதன் விழுதுகளும்…

விமலன் 

 

பிறேமராஜன் (தீட்சண்யன்) 30.01.1958-13.05.2000
ஆங்கில ஆசிரியர், கவிஞர், த.ஈ.வி.பு. புலனாய்வுத்துறை
கப்டன் மயூரன் அவர்களின் மூத்த சகோதரன்
 

ஒரு ஆலமரத்தையும் அதன் விழுதுகளையும் அண்ணாந்து பார்ப்பது போல் அந்த நினைவுகளை நான் திரும்பிப் பார்க்கிறேன்.

பிறேமராஜன் மாஸ்டரின் அர்ப்பணிப்புகள், தியாகங்கள் முழுவதையும் எழுத்தில் வடிப்பதென்றால் எதிலிருந்து தொடங்குவது எதில் முடிப்பதென்றே தெரியவில்லை. நான் எழுதியதில் ஆதியுமில்லை, அந்தமுமில்லை என்பதே உண்மை. நடுவில பல பக்கங்களைக் காணோம் என்ற நிலையும் உண்டு. ஏதோ என்னுடைய நினைவிற்கும் அறிவிற்கும் தெரிந்த சிலவற்றையாவது பகிர்ந்து கொள்வதில் ஆறுதலடைகிறேன்.

வரலாறு என்பது தனிநபரின் பார்வைக்குள் அடக்கி விட முடியாதது. 1988 களில் எனது அப்பா மூலம் முதற் தடவையாக பிறேமராஜன் மாஸ்டரைப் பற்றி அறிந்திருந்தேன். அவருடைய அப்பாவும் எனது அப்பாவும் நெருங்கிய உறவினராக(அத்தான் முறை ) இருந்ததோடு நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தார்கள். இருவருக்கும் ஒரே வயது (1933). ஒன்றாகப் படித்திருந்தார்கள். அழகு(அழகரத்தினம்), தியாகு( தியாகராஜா) ஆகிய இருவருடைய நாட்டுப் பற்றும் ஒன்றாகவே இருந்து வந்திருந்தன. இருவருடைய குடும்பங்களும் அதற்காகப் பல தியாகங்களையும் செய்துள்ளன

1988 காலப்பகுதியில் எமதூரில் விடுதலைப்புலிகளின் முதல் நின்ற அணி செல்ல, புதிய அணியொன்று வந்திருந்தது. அவர்கள் தும்பளை நாற் சந்தியில் அமைந்திருந்த சதாசிவம் பரியாரியரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். அவ் வீடு எமது வீட்டுக்கு மிகவும் அண்மையில் இருக்கின்றது. அவ்வணிக்கு மொறிஸ் அவர்கள் தலைமை தாங்கி வந்திருந்தார். அவர் என்னை முதன்முதலாகக் கண்டபோது யார் என்று வினவினார். நான் என்னுடைய பெற்றோரையும் சகோதரர்களையும், எனது வீட்டையும் அவருக்கு அடையாளப் படுத்தினேன். உடனே அவர், தான் எனது உறவினன் என்றும், என்னுடைய வீட்டில் தான் இங்கு இருப்பதாக சொல்ல வேண்டாம் என்றும் சொன்னார். இந்திய இராணுவக் காலப்பகுதியில் பருத்தித்துறையில் இருந்த புலிகளின் அணி, சுழற்சி முறையில் எமது ஊரிலிருக்கும் எல்லோருடைய வீட்டிலும் தங்குவார்கள். அதை அவர்கள் வழமையாகவே வைத்திருந்தார்கள். ஒருவேளை, யாராவது இவர்களை இராணுவத்துக்கு காட்டிக் கொடுக்காமல் இருப்பதுக்காகவோ தெரியாது.

1988களில் இந்திய இராணுவத்துடனான மோதல்கள் தீவிரம்பெற்றிருந்த வேளையில் எனது இரண்டாவது அண்ணன் ரவி (மேஜர் தாகூர் ) திருகோணமலைக் காட்டிலிருந்து மணலாற்றுக்கு தலைவரிடம் வந்திருந்தார். அவ்வேளை அவர், முள்ளியவளைக்கு பணியின் நிமித்தம் வந்து போவதுண்டு. அப்போது பிறேமராஜன் அத்தான் வீட்டிற்கும் அவர் வந்து போவதுண்டு.

1988களில் மிகக் கடினமான பயணங்களை மேற்கொண்டு என் அப்பா, என் அண்ணா( ரவி-மேஜர் தாகூர்) வைச் சந்திப்பதற்காக வற்றாப்பளையிலிருக்கும் பிறேமராஜன் மாஸ்ரர்(அத்தான்) வீட்டுக்கு வந்து போவார். 1996 இல் நாங்கள் புதுக்குடியிருப்பில் இருக்கும் பொழுது பிறேமராஜன் மாஸ்ரருடன் மேலும் அதிகமாக நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்கள் எங்களுக்கு வாய்த்தன. அவருடன் அவருடைய வீட்டில் சில காலங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தேன். அவ்வேளை நானும், அவருடைய உறவினரான ரூபன் மற்றும் வாசு ஆகியோரும் ஒன்றாக அங்கு தங்கி இருந்தோம். அவர் மட்டுமே வீட்டிலிருப்பார். மற்றைய குடும்ப உறுப்பினர்கள் வவுனியாவுக்குச் சென்றிருந்தார்கள்.

அவருடைய வீட்டு வெளிவாசலில், வற்றாப்பளைச் சந்தியில், நீண்ட பனங்குற்றி ஓன்று இருக்கையாகப் போடப்பட்டிருந்தது. பின்னேரம் 5 மணியளவில் அவர் வெளியே சென்று அக்குற்றியில் அமர்ந்து அவ்வூர் மக்களோடு அளவளாவுவார். அவர் சாதாரண பாமரமக்கள் தொடக்கம் புத்திஜீவிகள், போராளிகள், ஏழைகள், பணக்காரர்கள் என எல்லோருடனும் சாதி மத பேதமேதுமின்றி, எந்தவித பாகுபாடும் காட்டாது மிகவும் அன்பாகவும் அவ்வூராருக்கான நகைச்சுவைப் பாணியிலும், தனக்கேயுரிய நகைச்சுவைப்பாணியிலும் அவரவர்க்கேற்ப பேசிக் கொண்டிருப்பார். ஒவ்வொருவருக்கேற்ற மாதிரி அவர்களின் பாணியிலேயே கதைப்பார். அவருடன் இருக்கும் போது என்னை மறந்து சிரித்துக் கொண்டேயிருந்திருக்கிறேன்.

அவருடன் தங்கியிருந்தவேளையில், அவருடைய தமிழ், ஆங்கிலப் புலமை, பொது அறிவு, அறிவியல் என எல்லாப் புலமைகளையும் அந்த ஒரு மனிதரில் ஒன்றாகக் கண்டு வியந்திருக்கிறேன்.

அப்போது பிறேமராஜன் மாஸ்டர் தமிழீழ விடுதலைப் புலிகளின் மொழிபெயர்ப்புப் பிரிவொன்றின் முக்கிய மொழிபெயர்ப்பாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருந்தார். அவரால் பல ஆங்கிலப் புத்தகங்கள் (போராட்டம், புலனாய்வு, போரியல், அறிவியல், அரசியல்) தமிழ் மொழிக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு புத்தக வடிவில் ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. அத்தோடு இல்லாமல் பல ஆங்கிலத் திரைப்படங்கள் கூட தமிழ் மொழிபெயர்ப்போடு அங்கு வெளிவருவதற்கு அவருடைய பணிகள் காத்திரமாக அமைந்திருந்தன.

அவருடைய கவிதைகள், பட்டிமன்றம் போன்ற சிறப்பான நிகழ்வுகள் புலிகளின் குரல் வானொலியில் அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. இவர் அதிகம் வெளியில் தெரியாதவராகவே `தீட்சண்யன்´ என்ற புனைபெயரிலேதான் தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டு வந்திருந்தார்.

இவர் ஓர் சிறந்த ஆங்கில ஆசிரியராகவேதான் பருத்தித்துறையிலிருந்து முள்ளியவளைக்கு வந்திருந்தார். பின்னர் அங்கேயே தனது நிரந்தர வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். அவருடைய மனைவியும் அவருக்கேற்ற ஒரு சிறந்த துணைவியராகவே இருந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையும் பிறந்திருந்தார்கள். மூன்றாவது மகன் பரதன் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் படையணியில் இணைந்து, கப்டன் தரத்தில், இறுதியுத்தத்தில் இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் வீரமரணத்தைத் தழுவியிருந்தார். தனது தம்பியரில் ஒருவனான மொறிஸ் இன் இயற்பெயரான பரதராஜன் என்னும் பெயரையே சுருக்கி பரதன் என இந்த மகனுக்குப் பெயர் சூட்டியிருந்தார்.

பிறேமராஜன் அத்தான் குடும்பம் எங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தனர் என்று சொன்னால் மிகையாகாது. இடப்பெயர்வால் நாங்கள் புதுக்குடியிருப்புக்கு வந்த போது அங்கு உறவினர்கள் என்று சொல்ல அவர் குடும்பம் மாத்திரமே இருந்தது.

அவருடைய இரு சகோதரர்கள் எம் மண்விடுதலைக்காக விடுதலைப்புலிகளுடன் இணைந்து களமாடி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டவர்கள்.

அவர்களில் ஒருவர் கப்டன் மொறிஸ்
இவர் பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989 இல் இந்திய இராணுவத்துடன் நடைபெற்ற நேரடிமோதலில் தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார்.

மற்றையவர் கப்டன் மயூரன்
இவர் தலைவரின் நேரடி ஜாக்கெட் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவராக இருந்தார். 1993 இல் தவளைப்பாய்ச்சல் என்று புலிகளினால் பெயர்சூட்டி நடாத்தப்பட்ட பூநகரி இராணுவமுகம் தாக்குதலில் சைவர் படையணியில் இருந்து தீரத்துடன் போராடி வீரமரணத்தைத் தழுவியிருந்தார். இவருடைய நினைவாகவே பதுங்கிச் சுடும் படையணிக்கு “மயூரன் பதுங்கிச் சுடும் படையணி” என்று விடுதலைப்புலிகளினால் பெயரிடப்பட்டிருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்படையணியானது விடுதலைப்புலிகளின் முதன்மையான பல வெற்றிகரமான தாக்குதல்களுக்கு பெரும் வலுச் சேர்த்திருந்தது. கூடவே இப்படையணியானது வெளியே அதிகம் தெரியாதவகையில் தங்களது காத்திரமான பணிகளையும் செய்து முடித்திருந்தது.

விமலன்  (விமலன், பிரிகேடியர் மணிவண்ணனினதும் சுரங்கத்தாக்குதலில் வீரமரணமடைந்த மாவீரன் தாகூரினதும் சகோதரன்)

Friday, February 7, 2025

அம்மாவின் இழப்பு எமது தமிழ்ச் சமூகத்துக்கே பேரிழப்பாகும்!

Sivagamasunthary (Siva Thiyagarajah)
கப்டன் மயூரன் அவர்களின் தாயார்

ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வாழ்விடமாகவும் கொண்ட, மாவீரர்களான கப்டன் மொறிஸ், கப்டன் மயூரன், பிரேமராஜன்-மாஸ்டர் (தீட்ஷண்யன்-நாட்டுப்பற்றா ளர்) அவர்களின் தாயாரான திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள் தனது 88வது வயதில் ஜேர்மனியில் இன்று(18.05.2022) காலமானார்.  

கப்டன் மொறிஸ் – பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989இல் இந்திய இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடிமோதலின் போது வீரமரணத்தை அடைந்திருந்தார்.  

கப்டன் மயூரன் – இவர் எமது தேசியத் தலைவரின் பிரத்தியேக மெய்ப்பாதுகாவலராக பல வருடங்கள் சேவையாற்றி 1993இல் விடுதலைப் புலிகளால் திட்டமிடப்பட்ட பூநகரி இராணுவமுகாம் மீதான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையின்பொழுது இம்பிரான்- பாண்டியன் படையணியில் பங்காற்றி வீரமரணத்தைத் தழுவிக் கொண்டார். இவரின் பெயரால் `மயூரன் பதுங்கிக் குறி பார்த்துச் சுடும் படையணி´ உருவாக்கம் பெற்றிருந்தது. 

 பிறேமராஜன் மாஸ்டர் – இவர் ஒரு சிறந்த இலக்கியவாதியாகவும் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப் பாளராகவும் ஆங்கில ஆசிரியராகவும் திகழ்ந்தவர். இவர் ´கவிஞர் தீட்சண்யன்` என்னும் புனை பெயரில் இலக்கிய வட்டத்தில் பெரிதும் பேசப் பட்டவர். இவருடைய படைப்புகளாக கவியரங்கம், சிறுகதைகள், கட்டுரைகள், மொழி பெயர்க்கப்பட்டபுலனாய்வு நூல்கள்.. என்று பலவிடயங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையினரோடு தனது பெரும் காலத்தைக் கழித்திருந்தார். ஆதலால் பொது வெளியில் அவர் அதிகம் அறிமுகமாகியிருந்தவரில்லை. 

இவர்களின் அப்பாவுடன் இணைந்து அம்மாவின் போராட்டப் பங்களிப்பு என்பது பிள்ளைகளை நாட்டுக்காக உவந்தளித்தது மட்டுமல்லாமல்இன்னும் பலவழிகளிலும் இருந்தது. வவுனியாவில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இராணுவ நெருக்கடிக்கு மத்தியிலும் PLOTE தேசவிரோத அணியினரின் முகாமுக்கு முன் வீட்டில் இருந்து கொண்டு புலனாய்வுப் போராளிகளை உபசரித்து இராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த போராளிகளைப் பாதுகாத்து அனுப்பியுமிருந்தார். அம்மாவும் சில காலத்துக்கு முன்னர் தனது வாழ்வியலின் அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டிருந்தார். அவரும் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை அப்புத்தகம் வாயிலாக நிறுவியுமிருந்தார். ஜேர்மனி நாட்டில் எமது தமிழ் குழந்தைகளுக்கு பல காலமாக ஜேர்மன் தமிழாலயம் ஊடாக எமது தாய்மொழியை சிறப்பாக போதித்தும் வந்திருந்தார். மேலும் அம்மாவின் இரு பெண்பிள்ளைகள் எமது தேசம் சார்ந்த படைப்புகளை (கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், IBC யில் வானொலி நிகழ்ச்சிகள்) படைத்திருந்ததோடு தாயகம் சார்ந்து தமிழர்புனர்வாழ்வுக்கழகம் – ஜேர்மன் கிளையினுடாக பல தாயகம் சார்ந்த தன்னார்வத் தொண்டுகளையும் சிறப்பாக ஆற்றியிருந்தனர். அம்மாவின் இழப்பு என்பது எமது தமிழ்ச் சமூகத்துக்கே பேரிழப்பாகும். அம்மாவின் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம். 

 -விமலன் அழகரத்தினம்

Wednesday, May 20, 2015

Captain Mayuran (Saba) - Jacket Bodyguaurd






கப்டன் மயூரன் தலைவர் பிரபாகரனின் ஜாக்கெட் மெய்பாதுகாவலர்களில் (Jacket Bodyguard) ஒருவராக

Saturday, May 9, 2015

கப்டன் மயூரன்


கப்டன் மயூரன்
தியாகராஜா பாலசபாபதி
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: மயூரன்
இயற்பெயர்: தியாகராஜா பாலசபாபதி
பால்: ஆண்
ஊர்: பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
மாவட்டம்: யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 01.11.1970
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: கிளிநொச்சி பூநகரி - நாகதேவன்துறை கூட்டுப்படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம்
மேலதிக விபரம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.


Quelle - வீரவேங்கைகள்